பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவும், மத்திய பாஜக அரசை காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன.
கர்நாடகாவில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டின் இப்போது வரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில், 825 விவசாயிகள் விவசாயக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 138 பேர் வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர். அதில் இதுவரை 807 குடும்பங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்கியுள்ளது, 18 பேருக்கான இழப்பீடு இன்னும் நிலுவையில் உள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை, ஹாவேரியில் அதிகபட்சமாக 128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மைசூரில் 73 விவசாயிகளும், தார்வாட்டில் 72 விவசாயிகளும், பெலகாவி 71 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு ரூரல், பெங்களூரு அர்பன், உடுப்பி மற்றும் கோலார் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலைகள் எதுவும் பதிவாகவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் அரசை சாடிய பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, “காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் மத்தியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநிலத்தில் விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. சித்தராமையா அரசு கர்நாடக விவசாயிகளை ஏமாற்றிவிட்டதை இது தெளிவாகக் காட்டுகிறது.” என்றார்
பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், “பாஜகவும் விஜயேந்திராவும் இந்த விஷயத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. பூச்சிக்கொல்லிகளின் பற்றாக்குறை குறித்து குறிப்பிட்டிருந்தோம். பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தார், ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. டீசல் விலை அதிகரித்துள்ளது, கூடுதல் வரிகள் அதிகமாக உள்ளன. விவசாயிகளுக்காக மாநில அரசு பல மானியங்களை வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு கூடுதல் வரிகளை விதிப்பதை நிறுத்த வேண்டும்.” என்றார்.