பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோயிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களை தானே புதைத்ததாக முன்னாள் ஊழியர் போலீஸிஸிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அது தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இதுகுறித்து மங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சச்சின் தேஷ்பாண்டே கூறுகையில், “தர்மஸ்தலா கோயிலில் 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிய 52 வயதான நபர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவர் தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றியபோது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்துள்ளனர். தற்போது போலீஸில் புகார் அளித்த தூய்மைப் பணியாளர் பணிக்கு சேர்ந்தபோது, ஓர் உடலை புதைக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது கோயில் நிர்வாகிகள் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், குடும்பத்தோடு கொளுத்திவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த தூய்மைப் பணியாளர் 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஆற்றங்கரையோரம் புதைத்துள்ளார். பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு, காயமடைந்திருந்த பல பெண்களின் உடல்களை எரித்துள்ளார். அதில் பள்ளி மாணவிகளும் அடங்குவர். ஒருமுறை பள்ளி மாணவி ஒருவரின் உடலை, அவரது பாடப்புத்தக பையுடன் சேர்த்து எரித்துள்ளார்.
2014-ல் சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளரின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கே கோயில் நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை கொல்ல முயற்சித்தபோது, அங்கிருந்து குடும்பத்தோடு தப்பி தலைமறைவானார். அவர் தற்போது தனது தவறை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.
3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்த போது, “இந்த புகார் குறித்து 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெண்களின் பட்டியலை கொண்டு விசாரணை நடத்த இருக்கிறோம். இதுகுறித்து கோயில் நிர்வாகிகளை விசாரித்து, உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் நேத்ராவதி ஆற்றங்கரையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” என தெரிவித்தனர்.