புதுடெல்லி: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் ஒரு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அதில், 35 வயதான சச்சின் என்பரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு நோயாளிகளுக்கு குறைவான உணவுதான் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், சச்சின் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கரண்டி, பல் துலக்கும் பிரஸ் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு, குளியலறைக்குச் சென்று அவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் தண்ணீரை அருந்தி மேனேஜ் செய்துள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும்போது, “எங்களுக்கு மிகக் குறைவான அளவில்தான் காய்கறிகளும், சப்பாத்திகளும் வழங்கப்படும். வீட்டிலிருந்து யாராவது எங்களை பார்க்க வந்தால், எதாவது வாங்கி வருவார்கள். பெரும்பாலானவை எங்களை வந்து சேராது. சில நேரங்களில் ஒரு நாளைக்கு ஒரு பிஸ்கட் மட்டுமே கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததால், இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றில் ஸ்பூன்கள், பிரஷ்கள் மற்றும் பேனாக்கள் இருப்பதை மருந்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர், 29 கரண்டிகள், 19 பல் துலக்கும் பிரஷ்கள் மற்றும் இரண்டு பேனாக்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.