பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மைசூருவில் அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தின் வைர விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, மத்திய சுகாதார இணை அமைச்சர் அனுபிரியா படேல், கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், பாஜக எம்.பி. யதுவீர் வாடியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் முதல்வர் சித்தராமையா கன்னடத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையை தொடங்கியதும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பார்த்து சிரித்தவாறு, “உங்களுக்கு கன்னடம் தெரியுமா?” என வினவினார். அதற்கு அவர், தனக்கு கன்னடம் தெரியாது என்பதை போல தலையசைத்தார். இதனால் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
பிறகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசுகையில், “முதல்வர் சித்தராமையாவுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விழைகிறேன். கன்னடம் எனது தாய்மொழி இல்லையென்றாலும், இந்நாட்டிலுள்ள அனைத்து மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நான் மிகவும் மதிக்கிறேன். ஒவ்வொரு மொழியினர் மீதும் நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன்.
அனைவரும் தங்களின் தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். தங்கள் கலாச்சாரம், மரபுகளை பாதுகாத்து முன்னேற வேண்டும். அந்த நோக்கத்தை அடைய முயற்சிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கன்னடத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்க முயற்சிக்கிறேன்” என புன்னகையுடன் பதிலளித்தார். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கேள்வியும் அதற்கு குடியரசுத் தலைவர் பதிலளித்த விதமும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.