ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம் அடைந்தனர். இத்துயர சம்பவத்தை தொடர்ந்து இங்கு படிக்கும் 50 மாணவர்களுக்கு வகுப்பறையின்றி அவர்களின் படிப்பு தடைபட்டது.
அப்போது மாணவர்களின் எதிர்காலம் கருதி அதே கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்று விவசாயத் தொழிலாளி தனது 2 படுக்கை அறை கான்கிரீட் வீட்டை வகுப்பறைக்காக கல்வித் துறைக்கு வழங்கினார். இரண்டு வயது பேரன் உட்பட 8 பேருடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்களை உறவினர் வீட்டில் வைத்தார்.
பிறகு தனது விவசாய நிலத்தின் ஒரு ஓரத்தில் பிளாஸ்டிக் மற்றும் தார் பாய் மூலம் குடிசை அமைத்தார். அதில் 2 கட்டில், ஒரு ஸ்ட்வ் மற்றும் சில பாத்திரங்களுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கு புதிய கட்டிடம் தயாராகி விடும். அதுவரை நாங்கள் சமாளித்துக் கொள்வோம்” என்கிறார் மோர் சிங்.