கட்ச்: குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே ‘சிந்தூர் வனம்’ என்ற பெயரில் நினைவு பூங்கா அமைக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியா மேற்கொண்டது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், நாட்டு மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமைக்கும் மரியாதை தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே நினைவுப் பூங்கா அமைக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
புஜ் – மண்ட்வி சாலையில் அமைந்துள்ள மிர்சாபூர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இந்த நினைவு பூங்கா 8 ஹெக்டேரில் அமைக்கப்படுகிறது. இதற்கு ‘சிந்தூர் வனம்’ என பெயர் வைக்கப்படும். அடர் வனம், சிற்பங்கள் ஆகியவை இந்த நினைவு பூங்காவில் அமைக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பிரதமர் மோடி குஜராத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி பேசிய இடமும் இந்த நினைவுப் பூங்காவுக்குள் வருகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்பணிக்கப்படும் நினைவிடமும் சிந்தூர் வனம் நினைவுப் பூங்காவில் அமைக்கப்படும் என கட்ச் வனப்பகுதி தலைமை பாதுகாப்பாளர் சந்தீப் குமார் தெரிவித்தார். இந்த நினைவுப் பூங்கா அமைக்கும் பணியை ஓராண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.