புதுடெல்லி: கடல் முதல் மலைகள் வரை இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர், பூடான் நாடுகளுடன் இந்தியா எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. மேலும் இலங்கை, மாலத்தீவு ஆகிய தீவு நாடுகள் இந்தியாவுக்கு அருகே அமைந்துள்ளன. மிக நீண்ட காலமாக சீன, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பிரச்சினை நீடித்து வருகிறது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டில் சிக்கிமின் டோக்லாம் பகுதியில் இரு நாடுகள் இடையே 73 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக கடந்த 1947, 1965, 1971, 1999-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்கள் நடைபெற்றன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கடந்த மே மாதம் 2 நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது.
இந்நிலையில், இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்ல ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தகவல் தொடர்பு மற்றும் தீவிரவாதிகளை வேட்டையாடவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் எல்லைப் பகுதிகளை கண்காணிக்க 5,000 சிறப்பு ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவை தரைதளத்துடன் கேபிள் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும்.
இதன்படி சுமார் 100 மீட்டர் உயரத்தில் ட்ரோன்கள் பறக்கும். இவை சுமார் 10 கி.மீ. தொலைவு வரை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும். ஒரு ட்ரோன் தொடர்ந்து 9 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ட்ரோன்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். சிறப்பு தகவல் தொடர்பு கருவிகள் மூலம் செயற்கைக்கோள்கள் உடன் ட்ரோன்கள் இணைக்கப்பட்டு இருக்கும்.
காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்களின் மலைப்பகுதிகளில் சிறப்பு ட்ரோன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இவை தரைதளத்தில் கேபிளுடன் இணைக்கப்பட்ட ட்ரோன்கள் பறக்கும். இதேபோல கடல் எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளிலும் ட்ரோன்கள் பணியில் ஈடுபடுத்தப்படும். அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் சிறப்பு ட்ரோன்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
இந்த ட்ரோன்கள் இந்தியாவின் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவச கட்டமைப்புடன் இணைக்கப்படும். இதன்மூலம் எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களை இந்தியா மிக எளிதாக எதிர்கொள்ள முடியும். இவ்வாறு இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.