விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் உதயகிரி போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. கடற்படைக்காக புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஐஎன்எஸ் நீல்கிரி, இந்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற போர்க் கப்பலை கொல்கத்தாவில் உள்ள ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் தயாரித்து. ஐஎன்எஸ் உதயகிரி போர்க்கப்பலை மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த இரண்டு போர்க்கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கடற்படையில் இணைக்கப்பட்டன.
இதே பெயர்களில் இந்திய கடற்படையில் ஏற்கெனவே இருந்த போர்க்கப்பல்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் இப்போது புதிய போர்க் கப்பல்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் வடிவமைப்பு, எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத தொழில்நுட்பம், ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் அனைத்தும் மிகவும் மேம்பட்டவை மற்றும் நவீனமானவை. இந்த இரு கப்பல்களையும், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கியது. இந்த பிரிவு வடிவமைத்த 100-வது போர்க்கப்பல் ஐஎன்எஸ் உதயகிரி என்பது குறிப்பிடத்தக்கது.