புதுடெல்லி: கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, “அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு கடந்த 16-ம் தேதி விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் எம்.நூலி, “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் விஷ்ணு சிலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஜவாரி கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, விஷ்ணு சிலையை சீரமைக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சுயவிளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. நீங்கள் (மனுதாரர்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள். நீங்கள் நேரடியாக சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டார்.
தலைமை நீதிபதி கவாயின் இந்தக் கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது கருத்து மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘விஷ்ணு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்தை வாபஸ் பெற வேண்டும்’ என்று ஏராளமான வழக்கறிஞர்களும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். பல்வேறு மதத் தலைவர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில், கஜுராஹோ கோயில் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று ஒரு வழக்கு விசாரணையின்போது விளக்கம் அளித்தார். “கடந்த 16-ம் தேதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கோயில் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை முன்னிறுத்தியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.