புதுடெல்லி: கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையிலும் ஆடித் திருவாதிரை திருவிழாவாக ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடுகிறது.
இத்திருவிழா கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாச்சார மையத்தின் ஆதரவுடன் பயிற்சி பெற்ற மாணவர்களின் தேவாரம் திருமுறை மற்றும் கலாஷேத்ரா கலைஞர்களின் நிகழ்ச்சி உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுடன் 23-ம் தேதி மாலை தொடங்குகிறது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சோழ சைவம், கோயில் கட்டடக்கலை பாரம்பரிய நடைபயணம் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய பயணங்கள் குறித்த கண்காட்சியை நடத்துகிறது.
ஜூலை 27 அன்று முற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது. 27-ம் தேதி அன்று கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சியும், பாரம்பரியமிக்க ஓதுவார்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அத்துடன் பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
சைவ சித்தாந்தத்தின் செழுமையான தத்துவ பாரம்பரியத்தையும், தமிழின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டுவது, சைவ சமயத்திற்கு நாயன்மார்களின் பங்களிப்பை கொண்டாடுவது, சைவ சமயத்திற்கு ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்கள் ஆற்றிய பங்களிப்பை கொண்டாடுவது ஆகியவை இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.