புதுடெல்லி: ககன்யான் திட்டம் உலக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, நேற்று (ஆக.18) பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஷுபன்ஷு சுக்லா பதில் அளித்தார். அதன் விவரம்:
பிரதமர் மோடி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் நீங்கள். இதை எவ்வாறு உணருகிறீர்கள்? மக்கள் எத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்?
சுபன்ஷு சுக்லா: நான் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், எல்லோரும் என்னைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், மிகவும் உற்சாகமடைகின்றனர். இதில் முக்கிய விஷயம், விண்வெளித் துறையில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பலரும் ககன்யான் பற்றி அதிக உற்சாகமடைந்துள்ளனர். விண்வெளி நிலையத்தில் என்னுடன் இருந்தவர்கள், ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அந்த நிகழ்வுக்கு அழைப்பதற்கான எழுத்துப்பூர்வ வாக்குறுதியை இப்போதே கொடுங்கள் என வலியுறுத்தினர்.
பிரதமர் மோடி: நீண்ட விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்த பிறகு நீங்கள் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?
சுபன்ஷு சுக்லா: விண்வெளி நிலைய சூழல் மிகவும் வித்தியாசமானது. விண்வெளியை அடைந்தவுடன், சீட் பெல்ட்களை கழற்றிவிட்டு காப்ஸ்யூலுக்குள் சுற்றலாம். அங்கு இருந்தபோது, இதயத் துடிப்பு குறைவாக இருந்தது. எனினும், 3-4 நாட்களில் உடல் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்கிறது. ஆனால் பூமிக்குத் திரும்பும்போது, உடல் மீண்டும் தன்னை சரி செய்து கொள்ள நேரம் எடுக்கும். நான் ஆரோக்கியமாக இருந்தபோதிலும், என்னால் சரியாக நடக்க முடியவில்லை. யாரேனும் என்னை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. விண்வெளி நிலையத்தில் உணவு ஒரு பெரிய சவால். அங்கு குறைந்த இடமே உள்ளது. குறைந்த இடத்தில் போதுமான அளவு கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல வேண்டும்.
பிரதமர் மோடி: அவர்கள் உங்களை டேக் ஜீனியஸ் என்று அழைத்தார்கள். அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?
சுபன்ஷு சுக்லா: நான் விமானப்படையில் சேர்ந்தபோது, இனி படிக்க வேண்டியதில்லை என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு நான் நிறைய படிக்க வேண்டியிருந்தது. சோதனை விமானியாக ஆன பிறகு, பொறியியல் துறை சார்ந்து நிறைய படிக்க வேண்டி இருந்தது. இந்த பணிக்காக நாங்கள் நன்கு தயாராக இருந்தோம் என்று நினைக்கிறேன். இலக்கு வெற்றிகரமாக முடிந்தது. நாங்கள் திரும்பிவிட்டோம். ஆனால் இந்த பணி முடிந்துவிடவில்லை. இது ஒரு ஆரம்பம்தான்.
நான் சிறுவனாக இருந்தபோது, ராகேஷ் சர்மா சார் 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளி வீரராகச் சென்றார். அப்போது, விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவு என் மனதில் ஒருபோதும் வரவே இல்லை. ஆனால் இந்த முறை நான் விண்வெளி நிலையத்துக்குச் சென்றபோது, குழந்தைகளிடம் மூன்று முறை பேசினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், எப்படி விண்வெளி வீரராக முடியும் என்று குழந்தைகள் கேட்டார்கள்? இதுவே நம் நாட்டிற்கு ஒரு பெரிய வெற்றி என்று நான் நினைக்கிறேன். இன்றைய இந்தியாவில், அது சாத்தியம் என்பதை அவர்கள் அறிவார்கள். நமக்கு விருப்பம் உள்ளது, நம்மால் முடியும். இதில் எனக்கும் பொறுப்பு உள்ளது. எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்ததாக உணர்கிறேன்.
இவ்வாறு அந்த உரையாடல் அமைந்திருந்தது.
ஜூன் 25 அன்று அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ‘அக்சியம்-4’ திட்டத்தின் கீழ் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெகி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்வாவோஸ் உஸ்னைஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். இவர்கள் 60-க்கும் மேற்பட்ட சோதனைகளையும், ஆய்வுப் பணிகளையும் முடித்துக்கொண்டு ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜூலை 15-ஆம் தேதி பூமியை வந்தடைந்தனர்.