புதுடெல்லி: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான். இதற்காக இஸ்ரோ விமானப்படை பைலட்கள் 4 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்தது. இவர்களில் ஒருவர் குரூப் கேப்டன் ஷுபன்ஷூ சுக்லா.
அமெரிக்காவின் ஆக்ஸியாம் என்ற தனியார் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு 4 வீரர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா மேற்கொண்டது. இந்த குழுவில் இந்தியா சார்பில் செல்ல ஷுபன்ஷு சுக்லா தேர்வானார்.
இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பால்கன் ராக்கெட்டில் கடந்த மாதம் 26-ம் தேதி சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தனர். இந்த டிராகன் விண்கலத்துக்கு ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்டது.
அங்கு இவர்கள் பல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். 2 வாரகால ஆய்வுப் பணியை முடித்துவிட்டு இவர்கள் டிராகன் விண்கலம் மூலம் நேற்று மாலை 3 மணியளவில் பூமிக்கு திரும்பினர். விண்கலம் பாராசூட் உதவியுடன் பசிபிக் கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இது குறித்து இஸ்ரோவின் விண்வெளி மைய இயக்குநர் நிலேஷ் எம் தேசாய் கூறுகையில், ‘‘இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, சர்வதே விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) பெற்ற அனுபவம், இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளவுள்ள ககன்யான் திட்டத்துக்கு மிக முக்கியமானது’’ என்றார்.