புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்கும் நோக்கில் அரசியலமைப்பு திருத்த (129வது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகிய இரண்டு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பி.பி. சவுத்ரி தலைமையிலான குழு, மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், இவ்விரண்டு மசோதாக்கள் மீதான அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு நாடாளுமன்ற மக்களவையில் கோரிக்கை வைத்தார். இது தொடர்பான தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“அரசியலமைப்பு (129வது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2024 ஆகியவற்றின் மீது நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டில் வர உள்ள குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று பி.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார்.