திருமலை: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏஐ தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். அப்போது அவர் அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் அதன் பயனையும், செயல்பாட்டு முறைகளையும் கேட்டறிந்தார்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு ஏழுமலையானின் மகிமைகள், திருமலையின் புனித தன்மை, பெருமைகளை விளக்கும் வகையில் வீடியோ பதிவுகளை போட்டு காண்பிக்க வேண்டும். அப்போதுதான் திருமலையின் புனிதம், ஏழுமலையானின் பெருமைகள், வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிவார்கள். மேலும், திருப்பதி தேவஸ்தானத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கோயில்களையும் ஒரு குடையின் கீழ் இந்த கமாண்ட் கன்ட்ரோல் அறைக்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்-1ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஏஐ தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறை மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செய்யலாம்.
6,000 கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அடையாளம் கண்டு அலிபிரி முதல் திருமலை வரை எத்தனை பக்தர்கள் திருமலைக்கு வந்து கொண்டுள்ளனர். திருமலையில் எத்தனை பேர் தங்கி உள்ளனர் போன்ற விவரங்களை உடனுக்குடன் அறிய முடியும். இது நாட்டிலேயே முதன் முறையாக தற்போது ஏழுமலையான் கோயிலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.