புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யுஜிசி) அமைத்துள்ளது.
இந்த குழுவுக்கு புதுடெல்லியில் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்குமார் மிட்டல் தலைமை வகிப்பார் என யுஜிசி தெரிவித்துள்ளது. முன்னாள் யுஜிசி உறுப்பினர் சுஷ்மா யாதவ் மற்றும் குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் நீர்ஜா குப்தா ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆஷிமா மங்லா செயல்படுவார் என யுஜிசி அறிவித்துள்ளது.
நான்கு பேர் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு 7 நாட்களில் மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும். இந்த குழு பரிசீலனைகளையும் முன்மொழியும் என யுஜிசி கூறியுள்ளது.
என்ன நடந்தது? – ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார் உயிரிழந்த 20 வயதான மாணவி. அந்த கல்லூரியின் கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கல்லூரியில் புகார் குழுவில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.
இருப்பினும் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரியின் முதல்வரை பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 12-ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் அடுத்த சில மணி நேரத்துக்குள் அந்த மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
90 சதவீத தீக்காயத்துடன் அந்த மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த மாணவி உயிருக்கு போராடினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு காலமானார்.
பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு தரப்பினரை கொதிப்படைய செய்துள்ளது. அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகளை இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு அழுத்தம் எழுந்துள்ளது. இந்நிலையில், 14 நாள் நீதிமன்ற காவலில் மாணவி பயின்ற கல்லூரியின் முதல்வர் திலீப் குமார் கோஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.