புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோரில் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பயாபர் கிராமத்தில் மூன்று மர்ம நபர்கள் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து சிறுமி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான பிரவதி பரிதா, “புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில், பதினைந்து வயது சிறுமி ஒருவர் மீது சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன், அதிர்ச்சியடைந்தேன்.
சிறுமி உடனடியாக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரது சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவரின் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்கும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
பாலசோரில் நடந்தது என்ன? – ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 20 வயது மாணவி பி.எட் படித்து வந்துள்ளார். அந்த கல்லூரியின் கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கல்லூரியில் புகார் குழுவில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.
இருப்பினும் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரியின் முதல்வரை பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 12-ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் அடுத்த சில மணி நேரத்துக்குள் அந்த மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
90 சதவீத தீக்காயத்துடன் அந்த மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த மாணவி உயிருக்கு போராடினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு காலமானார்.
பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு தரப்பினரை கொதிப்படைய செய்துள்ளது. அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு அழுத்தம் எழுந்துள்ளது. இந்நிலையில், 14 நாள் நீதிமன்ற காவலில் மாணவி பயின்ற கல்லூரியின் முதல்வர் திலீப் குமார் கோஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல குற்றம்சாட்டப்பட்ட உதவி பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.