புதுடெல்லி: ஒடிசாவின் 4 முக்கிய மாவட்டங்களில் இந்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் தங்க கனிமங்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மயூர்பன்ச், மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக , ஒடிசா தங்க சுரங்கமாக மாறவுள்ளது. இங்கு 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை, ஒடிசா சுரங்கத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதமே ஒடிசா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால் இங்கு தங்க சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. நாட்டின் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் என்ற அளவிலேயே உள்ளது. ஒடிசாவில் தங்கம் எடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்கம் உற்பத்தி அதிகரிக்கும். இறக்குமதியும் ஓரளவு குறையும்.
முதல் கட்டமாக ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்க சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான பணிகளை ஒடிசா அரசு, ஒடிசா சுரங்க கார்பரேஷன், இந்திய தொல்லியல் துறை ஆகியவை விரைவு படுத்தியுள்ளன. இதன் மூலம் ஒடிசாவில் போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.