பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடைபெற்றது. இதையொட்டி அந்த கிராமத்தில் ‘ஐ லவ் முகம்மது’ என்ற வாசகத்துடன் மின்சாரப் பலகை நிறுவப்பட்டது. முதல் முறையான இந்தப் பலகை மிலாது நபி ஊர்வலத்திலும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முஸ்லிம்களின் வாசகப் பலகை அகற்றப்பட்டது.
இதையடுத்து வகுப்புவாதத்தை தூண்டியதாக அடையாளம் தெரியாத 15 பேர் உட்பட 24 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குப் பதிவு நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது. நபிகள் நாயகம் மீது அன்பை வெளிப்படுத்துவதில் யாருக்கு என்ன பிரச்சினை என முஸ்லிம் தரப்பு கேள்வி எழுப்பியது.
இதனையடுத்து, பரேலியைச் சேர்ந்த மவுலானா தவுகீர் ராசா நேற்று (செப்.26) போராட்டம் அறிவித்தார். இதற்கு காவல் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் ‘ஐ லவ் முகம்மது’ என்ற பலகைகளை ஏந்தியபடி, கோட்வாலியில் உள்ள மசூதிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறை மோதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட மதகுரு தவுகீர் ராசா மற்றும் ஏழு பேரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட நீதிபதி அவினாஷ் சிங் மற்றும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா ஆகியோர் கூறுகையில், “பரேலி வன்முறைக்கு முக்கிய காரணமான மவுலானா தவுகீர் ராசாவும், இதர ஏழு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினர்.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ராசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராசாவின் தூண்டுதலால் இளைஞர்கள் கூட்டம் வீதிகளில் இறங்கி, கலீல் திரஹா முதல் இஸ்லாமியா மைதானம் வரை கலவர சூழலை உருவாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராசாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற ஏழு பேர் சர்பராஸ், மனிஃபுதீன், அசீம் அகமது, முகமது ஷெரீப், முகமது ஆமிர், ரெஹான் மற்றும் முகமது சர்பராஸ் எனத் தெரியவந்துள்ளது. நேற்று (செப்.26) நடந்த வன்முறை தொடர்பாக 36 பேரை சம்பவத்தின் வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இன்று அதிகாலையில், எஸ்பி அக்மல் கான் தலைமையிலான போலீஸ் குழு, ராசாவை முறையாக கைது செய்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றது. அதனை தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சிலின் நிறுவனர் ராசா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பரேலி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இவர் செல்வாக்குடன் இருக்கிறார்.
சன்னி இஸ்லாத்தின் பரேல்வி பிரிவின் நிறுவனர் அகமது ராசா கானின் வழித்தோன்றலான இவர் மீது, 2010-ஆம் ஆண்டு நடந்த கலவரம் மற்றும் 2019-20-ஆம் ஆண்டு சிஏஏ/என்ஆர்சி எதிர்ப்பு போராட்டங்களின்போது வன்முறையை தூண்டியதாக முன்பு குற்றம் சாட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.