புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார்.
இந்நிலையில், ஐ.நா பொதுச் சபையின் 80-வது பொதுக் கூட்டம் செப். மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது. பொது விவாத நிகழ்ச்சி செப். 23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
இதில் உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் உரையாற்றுகிறார். இந்தியா மீது அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்று உரையாற்றுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் – புதின் சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நாளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், “எனக்கும், ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு அலாஸ்கா நகரில் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விஷயத்தில் அனைவரும் கவனம் செலுத்துவதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.