நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா சபையில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது. தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானின் விமானத் தளங்கள் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டின் ராணுவம் இந்தியாவிடம் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது.
அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்த விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் போலத் தோன்றினால், பாகிஸ்தான் அதை அனுபவிக்க வரவேற்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களைக் கொன்ற ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ தீவிரவாத அமைப்பை பாதுகாக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி எடுத்ததை நினைவு படுத்துகிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் ஒரு பங்காளியாக இருப்பதாகக் கூறிக் கொண்டு, 10 ஆண்டு காலமாக ஒசாமா பின்லேடனுக்கு அது எவ்வாறு அடைக்கலம் கொடுத்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். அதில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை. பாகிஸ்தான் முதலில் பயங்கரவாத முகாம்களை மூடிவிட்டு, தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்
யார் இந்த படால் கெலாட்? ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சார்பில் சக்திவாய்ந்த பதிலை வழங்கிய படால் கெலாட், அரசியல் அறிவியல், மொழிபெயர்ப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் அனுபவம் கொண்டவர்.
அவர், ஜூலை 2023 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகப் பணியில் முதன்மை செயலாளராக ஆனார். செப்டம்பர் 2024 இல், அவர் ஐக்கிய நாடுகள் சபையில் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். ஐநா பணிக்காக நியூயார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு, அவர் ஜூன் 2020 முதல் ஜூலை 2023 வரை இந்தியாவில் வெளியுறவு அமைச்சகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.
கெலாட் செயிண்ட் சேவியர் கல்லூரியில் (2005–2010) அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் (2010–2012) அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்காவின் மான்டேரியில் உள்ள மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் மொழி விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பில் (2018–2020) முதுகலைப் பட்டம் பெற்றார்.