புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பணியில் இருப்பார்” என்று தெரிவித்தது.
ரகுராம் ராஜனுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக உர்ஜித் படேல் பணியாற்றினார். இருப்பினும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி உர்ஜித் படேல் தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே 2018 டிசம்பர் 10 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான்.
உர்ஜித் படேல் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றுவது இது முதல் முறை அல்ல. 1996-1997 ஆம் ஆண்டு காலத்தில், அவர் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து மத்திய வங்கிக்கு பிரதிநிதியாக இருந்தார். அங்கு கடன் சந்தையை மேம்படுத்துதல், வங்கித் துறையை சீர்திருத்துதல், ஓய்வூதிய நிதிகளைப் புதுப்பித்தல் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்குதல் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும், 1998 முதல் 2001 வரை பொருளாதார விவகாரத் துறையின் கீழ் நிதி அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணியாற்றினார். மேலும் பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக வாரியம் அதன் அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு பொறுப்பாகும். நிர்வாக வாரியத்தில், உறுப்பு நாடுகள் அல்லது குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நிர்வாக இயக்குநர்கள் உள்ளனர்.