அமராவதி: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்ததும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நடைபெற இருந்த ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு ஏற்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை ‘ஸ்வர்ணாந்திராவின் நல்லாட்சி’ எனும் பெயரில் மாபெரும் ஒராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற இருந்தது.
இக்கூட்டத்தில் ஓராண்டு கால ஆட்சியின் சாதனைகள் மட்டுமல்லாது, இனி வர இருக்கும் 4 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அறிவிக்க இருந்தது.
இதற்காக அமராவதியில் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், அகமதாபாத் விமான விபத்தால் இதனை ரத்து செய்ய நேரிட்டது. இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், “அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மீளாத்துயர் கொண்டேன். இதில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
அவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார். இதேபோன்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் அகமதாபாத் விமான விபத்துக்கு தங்களின் அதிர்ச்சியையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.