டேராடூன்: ஏமாற்றும் ஜிஹாதிகளை எந்த விலை கொடுத்தாவது உத்தராகண்ட் அரசு நசுக்கும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “(தேர்வுகளில்) ஏமாற்றுவதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்ததை அடுத்து, பயிற்சி மாஃபியாவும் (பயிற்சி நிறுவனங்கள்), மோசடி மாஃபியாவும் இணைந்து ‘ஏமாற்றும் ஜிஹாத்’ முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், ‘ஏமாற்றும் ஜிஹாதி’களை அரசு எந்த விலை கொடுத்தேனும் நசுக்கும்.
மோசடி மாஃபியாவைக் கட்டுப்படுத்த நாட்டின் சிறந்த மோசடி எதிர்ப்புச் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட மோசடி மாஃபியாக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசின் முயற்சிகளால் கடந்த 4 ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு வேலைகளை வெளிப்படையான முறையில் பெற்றுள்ளனர். தற்போது இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் பல தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்.
இளைஞர்களின் இந்த முன்னேற்றத்தை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் ஒன்றிணைந்து இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ள முயல்கிறார்கள். அரசின் கண்டிப்பு காரணமாக, ஏமாற்று மாஃபியாக்களும் பயிற்சி மாஃபியாக்களும் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் நமது தேவபூமியில் ‘ஏமாற்றும் ஜிஹாத்’தை தொடங்க முயல்கின்றனர். இதன்மூலம், விசாரணைகள் முடிவடைவதற்கு முன்பே, அவர்கள் மாநிலத்தில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றனர். இதுபோன்ற சக்திகளின் நோக்கம் வெற்றிபெற அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என தெரிவித்துள்ளார்.