புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, சீனாவுக்கு இம்மாதம் 31-ம் தேதி செல்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் டியான்ஜின் நகரில் இம்மாதம் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்கு சீனா தலைமை தாங்குகிறது.
இம்மாதம் 30-ம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்து
கொள்கிறார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி 31-ம் தேதி சீனா செல்கிறார். டியான்ஜின் நகரில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்த 2019-ம் ஆண்டுக்குப்பின் பிரதமர் மோடி சீனா செல்வது இதுவே முதல் முறை.
உச்சி மாநாட்டுக்கு முன் சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ தொடர் கூட்டங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
சீனாவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைக்கும் வேளையில் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.