புது டெல்லி: கடந்த அக்டோபரில் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் உருவான அமைதி மற்றும் நிலைத்தன்மையால் பயனடைந்துள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான பேச்சுவார்த்தையின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.
இந்தியா – சீனா இடையேயான நீண்டகால எல்லைப் பிரச்சினையைக் கையாள்வதற்கான மிக உயர்ந்த அமைப்பான சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றுக்காக, சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று டெல்லியில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, கடந்த ஒன்பது மாதங்களில் இந்தியா- சீனா உறவுகளில் வளர்ச்சி போக்கு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட தோவல், “எல்லைகள் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியும் இருந்தன. இதில் நமது இருதரப்பு பங்களிப்பு மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தன” என்று கூறினார்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்வார் என்று அறிவித்த தோவல், “சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்த அக்டோபரில் ரஷ்ய நகரமான கசானில் நடந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய போக்கை அமைத்தனர். இதனால் உருவாக்கப்பட்ட புதிய சூழல், நாங்கள் பணியாற்றி வந்த பல்வேறு துறைகளில் முன்னேற எங்களுக்கு உதவியது” என்றார்.
எல்லையில் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள சீன அமைச்சரான வாங் யி, “கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் சந்தித்த பின்னடைவுகள் இரு நாட்டு மக்களின் நலன்களுக்கு உகந்தவை அல்ல. எல்லைகளில் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ள ஸ்திரத்தன்மையைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது இருதரப்பு உறவு, வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான வாய்ப்பை எதிர்கொள்கிறது. எங்கள் அழைப்பின் பேரில் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமரின் சீனா வருகைக்கு சீனத் தரப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது” என்றார்