புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள எல்லைப்பகுதிகள் மற்றும் நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சியை முறியடித்து, 7 பயங்கரவாதிகளைக் கொன்றதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்த சில மணிநேரத்துக்கு பின்பு உள்துறை அமைச்சரின் இந்த ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது.
அந்தக் கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள நிலைமைகளை பற்றி அதிகாரிகளோடு ஆலோசித்தது மட்டும் இல்லாமல், நாட்டிலுள்ள விமானநிலையங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததாக தெரிகிறது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளை எல்லைப் பாதுகாப்புப்படை கண்காணித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளைப் பாதுகாக்கும் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வு முகமையின் இயக்குநர் தாபன் தேகா, எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), சிவில் விமான போக்குவரத்து முகமையின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிரப்பு பகுதிகளில் இந்தியா நடத்திய பதில் தாக்குதல்களைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தச் சூழலில் இந்த ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது.