எம்.டெக். படிப்பதற்காக லண்டனுக்கு புறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் மகள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரைச் சேர்ந்த சுரேஷ் கதிக் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். இவருடைய மகள் பாயல், பி.டெக். படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். இதன்மூலம் கிடைத்த வருமானத்தை குடும்பத்தினருக்கு வழங்கி வந்துள்ளார். இதையடுத்து லண்டனில் மேல் படிப்பு படிக்க விரும்பினார்.
இதன்படி, கடந்த 12-ம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பாயல் புறப்பட்டார். முன்னதாக அவருடைய தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பாயலை வழியனுப்பி வைத்தனர். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த பாயல் உள்ளிட்ட 241 பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சுரேஷ் கதிக் கூறும்போது, “என் மகள் பாயல் லண்டனில் எம்.டெக். படிக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, கல்விக் கடன் பெற்று அவரை ஆசை ஆசையாக லண்டனுக்கு வழி அனுப்பி வைத்தோம். படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து கடனை அடைத்துவிட்டு, எங்கள் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்பார் என்று நம்பினோம். ஆனால் என் மகளே இறந்துவிட்டார்” என்றார்.