புதுடெல்லி: “தயவுசெய்து என்னை தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம். செனாப் பாலத்துக்காக பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவர். செனாப் நதியின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் வளைவுப் பாலத்துக்கான பெருமை இந்திய ரயில்வேக்கும், ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஹீரோக்களுக்கும் சொந்தமானது” என்று பேராசிரியர் மாதவி லதா தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது லிங்க்டு இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததற்கு இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் பாலம் ஒரு சிவில் இன்ஜினியரிங் அற்புதம். திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் அனைத்துப் பெருமையும் இந்திய ரயில்வே மற்றும் AFCONS-க்கு உரியது.
இந்தப் பாலத்தின் கட்டுமானத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வழிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதற்காக இன்று நான் வணக்கம் செலுத்தும் மில்லியன் கணக்கான பெயர் தெரியாத ஹீரோக்கள் உள்ளனர். AFCONS-ன் புவி தொழில்நுட்ப ஆலோசகராக எனது பங்கு சாய்வு நிலைப்படுத்தல் திட்டங்களை உருவாக்குவதற்கும் சரிவில் அடித்தளங்களை வடிவமைப்பதற்கும் உதவுவதாகும்.
‘பணிக்குப் பின்னால் இருக்கும் பெண்’, ‘சாத்தியமற்றதை சாத்தியமாக்கினார்’ மற்றும் ‘பாலத்தைக் கட்ட அற்புதங்களைச் செய்தார்’ போன்ற அனைத்து ஊடக அறிக்கைகளும் ஆதாரமற்றவை. பல தந்தையர்கள் தங்கள் மகள்கள் என்னைப் போல மாற வேண்டும் என்று எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர். பல இளம் குழந்தைகள் இப்போது சிவில் இன்ஜினியரிங் தங்கள் தொழில் தேர்வாக எடுக்க விரும்புவதாக எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி.
செனாப் பாலத்துக்கு பாராட்டுத் தெரிவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து என்னை தேவையில்லாமல் பிரபலமாக்காதீர்கள். நான் இப்போது ஸ்பெயினில் ஒரு மாநாட்டில் கலந்துகொள்கிறேன். நீங்கள் அனைவரும் எனது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
செனாப் பாலத்துக்கு மாதவி லதாவின் பங்களிப்பு என்ன? – ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், இன்ஜினீயரிங் அதிசயம் என்று போற்றப்படுகிறது.
செனாப் நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிமென்ட் தூண்களால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியை மாதவி லதாவின் உதவி கோரப்பட்டது.
பாறை கட்டுமானத் துறை நிபுணரான அவர், செனாப் நதி பகுதிக்கு தனது குழுவினருடன் சென்று விரிவான ஆய்வு நடத்தினார். அங்குள்ள பாறைகளின் தன்மையை ஆய்வு செய்த மாதவி இரும்பு தூண்களால் பாலத்தை கட்ட பரிந்துரை செய்தார். பாறைகளின் இடுக்குகள், பிளவுகளை அஸ்திவாரமாக பயன்படுத்தி கட்டுமான வரைபடத்தை அவர் தயார் செய்தார். இதன்படி பாறைகளின் இடுக்குகளில் பிரம்மாண்ட இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு பிரத்யேக சிமென்ட் கலவையால் மூடப்பட்டன. சில இடங்களில் பாறைகள் மிக ஆழமாக துளையிடப்பட்டு இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டன. இதன்காரணமாக உலகின் மிகவும் வலுவான பாலங்களில் ஒன்றாக செனாப் ரயில் பாலம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால்கூட பாலத்துக்கு சிறுசேதம்கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட தகர்க்க முடியாது. பாலத்தின் சில தூண்கள் சேதமடைந்தாலும் பாலம் உடையாது. 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த பாலம் 120 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்று தரச்சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான அப்கான்ஸ், பெண் இன்ஜினீயர் மாதவி லதாவின் கட்டுமான வரைபடம், தொழில்நுட்பங்களைப் பின்பற்றி செனாப் பாலத்தை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளது. இந்த பாலத்துக்காக மாதவி லதா தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார். இதற்காக இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளது.
ஐஐஎஸ்சி நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “செனாப் பாலத்தை கட்ட மாதவி லதாவும் அவரது குழுவினரும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். மிகவும் சவாலான மலைப் பகுதிகளில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. சரிவான மலைகளில் பாறைகளையே அஸ்திவாரமாக பயன்படுத்தி பிரம்மாண்ட இரும்பு பாலத்தை கட்டி உள்ளனர். மாதவி லதா, அவரது குழுவினரின் சாதனைக்காக பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த மாதவி லதா? – ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், ஏடுகுண்டலபாடு என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் மாதவி லதா பிறந்தார். அங்குள்ள அரசு பள்ளியில் அவர் கல்வி பயின்றார். மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் போதிய பண வசதி இல்லாததால் பெற்றோரின் அறிவுரைப்படி இன்ஜினீயரிங் துறையை அவர் தேர்வு செய்தார். ஆந்திராவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அவர் பிடெக் படித்தார். பின்னர் வாரங்கலில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்டெக் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பாறை பொறியியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
கடந்த 2003-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியையாக மாதவி லதா பணியாற்றி வருகிறார். உலகின் மிக உயரமான, வலுவான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் அவர் திரும்ப வைத்துள்ளார்.