தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சி.பி.ராதாகிருஷ்ணன், 1998, 1999 ஆகிய மக்களவை தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தெலங்கானா ஆளுநராகவும் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன்.