மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்சிபி (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே கூறினார்.
சரத் பவார் மற்றும் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் இயங்கி வரும் என்சிபி-யின் இரு அணிகளும் இணையவிருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளது. சமீப காலத்தில் சரத் பவாரை அஜித் பவார் பலமுறை சந்தித்து பேசியதால் இணைப்பு குறித்த பேச்சு எழுந்தது.
இதுதுகுறித்து என்சிபி (சரத் பவார்) எம்.பி.யும் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலேவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “இரு அணிகளும் இணைவது எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை.. அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கூட்டம் கூட்டப்படும்போது அதில் எங்களைப் பார்ப்பீர்கள்” என்றார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2003 ஜூலையில் என்சிபி இரண்டாக உடைந்தது. அஜித் பவார் தலைமையில் என்சிபி எம்எல்ஏக்கள் பலர் தனியே பிரிந்து சென்று பாஜக – சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் அணியை உண்மையான என்சிபி.யாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.