புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி அடுக்கை 4-லிருந்து 2 ஆக குறைப்பது மற்றும் வரி விகிதங்களை குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேநேரம், வரிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.
இது போல, ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என அம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. மேலும் ஆடம்பர பொருட்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 40 சதவீதத்துக்கும் கூடுதலாக வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.