புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடின. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது அவர், உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற திவ்யா தேஷ்முக்-குக்கு அவை சார்பில் பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து, அலுவல் தொடங்கியது. அப்போது, பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், பிற மாநிலங்களில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள் அவமரியாதையுடன் நடத்தப்படுவதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதை ஏற்க மறுத்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், திட்டமிட்டபடி அவை அலுவல்கள் நடைபெறும் என்றும் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை பகல் 2 மணிக்கு ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.
மக்களவையில் கேள்வி நேரம்: அதேநேரத்தில், மக்களவை அலுவல்கள் வழக்கம்போல் நடைபெற்றன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்கள் குறித்து உத்தரப் பிரதேசத்தின் எம்பி சந்திரசேகர் ஆசாத் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, உங்கள் கட்சியை தமிழ்நாட்டுக்கு விரிவுபடுத்த திட்டமிடுகிறீர்களா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து கேள்விக்கு பதில் அளித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழ்நாடு குறித்த கவலையை வெளிப்படுத்தியதற்காக சந்திரசேகர் ஆசாத்துக்கு பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் 2020 முதல் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் உபகரணங்களைப் பெற்றுள்ளனர். மேலும், மூத்த குடிமக்கள் ரூ.1,057 கோடிக்கு மேல் மதிப்புள்ள உபகரணங்களைப் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
இதையடுத்து, உள்ளாட்சித் துறை தொடர்பான கேள்விகளை திமுக எம்பி கனிமொழி எழுப்பினார். அதற்கு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் ராய் பதில் அளித்தார்.
மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு கேள்விகளை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.