புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பி-கள் மேற்கொண்ட அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடக்கூடாது என்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஓம் பிர்லா வலியுறுத்தினார். எதிர்க்கட்சியினர் இதை ஏற்க மறுத்ததை அடுத்து அவையை 12 மணி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து, பகல் 12 மணிக்கு சந்தியா ராய் தலைமையில் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையில் இருந்த சந்தியா ராய், உறுப்பினர்கள் இருக்கையில் அமருமாறும் அவையை சமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கோரினார். மேலும், இங்கே என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும், அமளி தொடர்ந்ததால் அவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மாநிலங்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், கேள்வி நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர், உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக அவையை 2 மணிவரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார்.
பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்றும் எனவே இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக, நேற்று மக்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளன. நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க விதிகளில் இடமில்லை. மேலும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. நாடாளுமன்ற மக்களவையில் முக்கிய மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்ற உள்ளதால் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.