புதுடெல்லி: பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நேற்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் அவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சிகள் மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மசோதா நிறைவேற்றம்: அமளிக்கு நடுவே கடல் வழி சரக்கு போக்குவரத்து மசோதா 2025 மீது சுருக்கமான விவாதம் நடைபெற்றது. சுதந்திரத்திற்கு முந்தைய 100 ஆண்டுகள் பழமையான இந்திய கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்லும் சட்டம் 1925 ஐ மாற்றுவதை இந்த புதிய மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. இதையடுத்து, கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2025 இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.