புதுடெல்லி: ஹைதராபாத்தில் நேற்று நடை பெற்ற விடுதலை தின சிறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ ஒருவரின் தலையீட்டால் ஏற்பட்டதா என்று சிலர் கேட்கிறார்கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை யாரோ ஒருவரின் தலையீட்டால் நிறுத்தப்படவில்லை. இன்றைய இந்தியாவிடம் எதிரிகளின் கண்களைப் பார்த்து பதிலளிக்கும் திறன் உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதில் 3-ம் தரப்புக்கு பங்கு இல்லை என்பதை இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதைத்தான் தற்போது பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடங்கும். இதில் சமரசத்துக்கு இடமில்லை. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் கூறினார்.