அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாதப் பொருளாகியுள்ளது. இது இந்தியாவுக்கு நெருக்கடி என்றும், இல்லை இந்தியர்கள் திறமை இனி இந்தியாவுக்கு முழுமையாக பயன்படும் என்றும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.
2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5-ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. முன்னதாக எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இன்றைக்கு மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற ஒரு டெக் ஜாம்பவான் நிறுவனத்தில் ஓர் இளைஞருக்கோ / இளம்பெண்ணுக்கோ வேலை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அமெரிக்காவில் பணி புரிய அந்த நிறுவனம் H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் இந்திய மதிப்பில் ரூ.88 லச்டம் விசா கட்டணமாக செலுத்த வேண்டும். இது நிச்சயமாக இந்தியர்களுக்கு ஒரு பின்னடைவு தான். அமெரிக்காவில் வேலை என்ற கனவில் இருக்கும் இளம் தலைமுறையினருக்கு இடிதான்.
இந்த நகர்வின் மீது இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருக்கும் டெக் நிறுவனங்கள் கடுமையாக எதிரிவினையாற்றினாலும் கூட, “வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, அமெரிக்காவுக்கு பணிக்கு வரும் வெளிநாட்டினர் மிகவும் திறமையானவர்கள் என்பதையும், அமெரிக்க தொழிலாளர்களை மாற்றக்கூடாது என்பதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும், இந்தத் திட்டம் மூலம் அமெரிக்காவின் கருவூலத்துக்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி கிடைக்கும்.” என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வரும்முன்னர் முன்வைத்த முக்கிய வாக்குறுதியே அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரியதாக்குவேன் என்பதே. மாகா (MAGA) என்ற அவரது வாக்குறுதியை தூக்கிப் பிடிக்கும் விதமாகவே அவருடைய பல்வேறு கெடுபிடிகளும் அணிவகுத்து இருக்கின்றன. அதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது தான் இந்த எச் 1 பி விசா கட்டணம் உயர்வு எனலாம்.
அமெரிக்காவில் ட்ரம்ப்பின் இந்த நகர்வுக்கு வரவேற்பு எழுந்துள்ளதாகவே தெரிகிறது. 1 லட்சம் டாலர் எச்1 பி விசா கட்டணம் என்பதால் அமெரிக்க நிறுவனங்களும் இனி அமெரிக்க பட்டதாரிகளை அதிகமாக பணியில் அமர்த்த முன்வரும் என்று அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்கர்களால் இந்த வேலையைப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பணிகளுக்கு மட்டுமே வெளிநாட்டவரை பணியமர்த்தினால் போதுமென்பது ட்ரம்ப்பின் பார்வையாக இருக்கிறது. இது இந்தியாவுக்கு நெருக்கடியாக இருக்கும் என்ற பார்வை ஒருபுறம் இருக்க இந்த நகர்வால் இந்தியாவுக்கு ஒரு வகையில் லாபம் தான். இங்கே உள்ள திறமைசாலிகள், டெக் ஆளுமைகள் இங்கேயே முழுமையாக பயன்படுத்தப்படுவார்கள் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவுக்கு திறமைசாலிகளை தக்கவைக்கும் ரீதியாக ஒரு மறுமலர்ச்சி என்று பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், ட்ரம்ப்பின் இந்த நகர்வு குறித்து நிதி அயோக் முன்னாள் சிஇஓ அமிதாப் கந்த் கூறுகையில், “எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்துவது அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தான் பாதிக்குமே தவிர, இந்தியப் பொருளாதாரத்தை அல்ல. அமெரிக்காவில் புத்தாக்க சிந்தனைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம், ஆனால் திறமையான பணியாளர்களால் இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேரும்.
சர்வதேச திறமைசாலிகளுக்கு கதவடைப்பதன் மூல, அமெரிக்கா அடுத்த அலை ஸ்டார்ட் அப்கள், ஆராய்ச்சிகள், காப்புரிமை சார்ந்த படைப்புகள் ஆகியவற்றை பெங்களூரு, ஹைதராபாத், புனே, குர்கானுக்கு தள்ளிவிடுகிறது. இனி இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் மிக அதிகமாக பங்களிப்பார்கள். இது ‘விக்ஷித் பாரத்’-ஐ நோக்கி இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும்.” என்றார்.