புதுடெல்லி: தங்களுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க அனுமதிக்க மாட்டோம் என இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீண்டிய நிலையில், அதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, ‘எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் நேற்று நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவால் பாகிஸ்தானிடமிருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது. எங்கள் தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். நீங்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிக்கும்” என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அசாதுதீன் ஓவைசி, “ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமர். அவர் இதுபோல முட்டாள்தனமாகப் பேசக் கூடாது. இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது. பாகிஸ்தானின் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று கூறினார்.
சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “சிந்து நதி நீரை தடுக்க இந்தியா அணை கட்டினால், நாங்கள் அதனை தகர்ப்போம். பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால், பாதி உலகத்தையும் எங்களுடன் அழைத்துச் சென்றுவிடுவோம்” என்று கூறி பரபரப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.