புதுடெல்லி: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்ததைத் தொடர்ந்து ‘வாக்குகள் திருட்டு’ என்ற தலைப்பு எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ராகுல் காந்தி இன்று நடத்தினார். அதில் அவர் கூறும்போது, “பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது ஆகியவை அந்த ஐந்து வகை.
நாட்டிலுள்ள இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைத்தார்.
இதனையடுத்து எக்ஸ் தளத்தில் சில மணி நேரங்களிலேயே இது தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் ட்ரெண்டு ஆகின. ‘தேர்தல் ஆணையம், ‘ராகுல் காந்தி’, ‘வாக்கு திருட்டு’ போன்ற தலைப்புகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. அதிலும் #VoteChori என்ற ஹேஷ்டேக் சில மணி நேரங்களிலேயே 3 லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பலரும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.