புதுடெல்லி: இளம் வயதில் தலை முடி கொட்டுவதால், தம்மை அழகாக்கிக் கொள்ள ஆண், பெண் இருபாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். இதற்காக உ.பி.யின் கான்பூரில் டாக்டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்துவமனைக்கு இளம் பொறியாளர்கள் 2 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அவர்களில் உ.பி.யின் பரூக்காபாத்தை சேர்ந்த பொறியாளர் மயங்க் கட்டியார் என்பவர் கடந்த நவம்பர் 18-ல் அனுஷ்கா மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்றார். ஆனால் 24 மணி நேரத்துக்கு பிறகு முகம் வீங்கி, மயங்கின் உடல்நிலை மோசமடைந்தது. மறுநாள் 19-ல் மயங்க் உயிரிழந்தார். அதேபோல் கான்பூர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினீத் துபேவும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மார்ச் 15-ல் உயிரிழந்துள்ளார்.
இருவரது குடும்ப உறுப்பினர்களும் டாக்டர் அனுஷ்கா மீது புகார் அளித்தனர். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் முதல்வர் ஆதித்யநாத்தின் இணையதளத்தில் புகார்கள் பதிவேற்றப்பட்டன.
இதையடுத்து வினீத் மனைவி அளித்த புகாரின்படி கல்யாண்பூர் பகுதி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க தொடங்கி உள்ளனர். இந்த தகவல் பரவியதும் முடி மாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட வேறு பலரும் டாக்டர் அனுஷ்கா மீது புகார் அளித்தனர். இதனால், மருத்துவமனையை மூடிவிட்டு அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான எந்த தகுதியும், பயிற்சியும் டாக்டர் அனுஷ்காவுக்கு இல்லை என தெரிந்துள்ளது. இந்த சிகிச்சைக்காக டாக்டர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ஒரு லட்சம் வரை பெற்றுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கல்யான்பூர் பகுதி காவல் துறை உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே கூறும்போது, ‘‘டாக்டர் அனுஷ்கா பல் மருத்துவம் மட்டுமே பயின்றவர் என விசாரணையில் தெரிந்துள்ளது. தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றார். மேலும், உ.பி.யின் மற்ற பகுதிகளில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.