புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியின் பக்ராபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு மீன் வளர்ப்பால் அதிக பலன் கிடைத்துள்ளது.
அயோத்திக்கு அருகிலுள்ள பாராபங்கியின் பக்ராபூர் கிராமத்தை சேர்ந்த மீன் விவசாயி அஸ்லம் கான் (40). ஜாவேத் கான் என்பவரின் மகனான அஸ்லம், ஒரு பட்டதாரி. கடந்த 2014 இல் தனது மூதாதையரின் 8 ஏக்கர் நிலத்தில் வாழைப்பழ விவசாயத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வரை இந்தத் தொழிலில் செய்து வந்துள்ளார்.
துவக்கத்தில் வாழை பயிர் விளைச்சலால் அஸ்லமிற்கு சம்பாத்தியம் கிடைத்துள்ளது. ஆனால் பின்னர் அவரது வருமானத்தில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த அஸ்லம் கான், இறுதியில் வாழை விளைச்சலை மூடிவிட்டு, வேறு வாய்ப்புகளைத் தேடினார். இந்த தேடலில், அஸ்லமிற்கு, பாராபங்கியில் உள்ள கங்வாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆசீப் சித்திக் என்பவரின் மீன் பண்ணை கண்ணில் பட்டுள்ளது.
இதை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றவருக்கு, மீன் வளர்ப்பில் ஆர்வம் எழுந்துள்ளது. இதையடுத்து அஸ்லம் கான் தனது நிலத்தில் 27,000 சதுர அடி நிலத்தில் மூன்று மீன் குளங்களைக் கட்டியுள்ளார். அவற்றில் பங்கசியஸ் எனும் வகை மீன்களை வளர்க்கத் தொடங்கினார். இதன் துவக்கத்தில் அஸ்லம், குறைவான மீன்களை வளர்த்ததால் இழப்பை சந்திக்க வேண்டி வந்தது. எனினும், மீன் வளர்ப்பில் அஸ்லம் கான் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. மீண்டும் தனது குளங்களில் கூடுதலாக35,000 பங்கசியஸ் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்தார்.
இவற்றின் மூலம், ஆறு மாதங்களுக்குள் 21 டன் எடையில் மீன்களை உற்பத்தி செய்தார். இவற்றில் ஒவ்வொரு மீனும் சுமார் 700 கிராம் எடையுள்ளதாக இருந்தது. அவரது மீன் பண்ணையின் முதல் விளைச்சலாக ரூ. 8,40,000 வருமானம் அஸ்லமிற்கு கிட்டியுள்ளது. தனது இந்த வருமானத்தால் ஊக்கமடைந்து, 2018 ஆம் ஆண்டில், அஸ்லம் ஒரு ஏக்கர் நிலத்தில் மற்றொரு குளத்தை உருவாக்கினார்.
அதிலும் அஸ்லம் கான் பங்காசியஸுடன் இந்திய மேஜர் கெண்டை மீன்களையும் வளர்த்தார். தற்போது, அஸ்லம் எட்டு ஏக்கரில் 24 மீன் குளங்கள் மற்றும் இரண்டு நர்சரிகளுடன் பெரிய அளவிலான மீன் வளர்ப்பை நடத்தி வருகிறார். இந்த ஆண்டு, அவர் மூன்று லட்சம் பங்காசியஸ் மீன் குஞ்சுகளை சேமித்து வைத்திருந்தார். அதில், 2.20 லட்சம் மீன்கள் ஏற்கனவே வளர்ந்துள்ளன.
இதுவரை அஸ்லம் கான் தனது பண்ணைகளின் மூலம் 162 டன் மீன்கள் விற்பனை செய்துள்ளார். தற்போது, அஸ்லாமின் பண்ணையில் 40,000 மீன்கள் உள்ளன.ஒவ்வொன்றும் 400-500 கிராம் எடையுள்ளவை. இவை, வரும் டிசம்பரில் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஜனவரி 2019 முதல், அவர் ABIS துணை மீன் தீவனத்தின் வியாபாரியாகவும் இருந்து வருகிறார்.
தற்போது அஸ்லம் கான் உபியின் 350 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளை சப்ளை செய்கிறார். இந்த சாதனைக்கு உபி மாநில அரசின் மீன்வளத் துறையிடமிருந்து கிடைத்த ஆதரவு காரணம் என தெரிக்கின்றார் அஸ்லம் கான். இது குறித்து உபியின் மீன் விவசாயியான அஸ்லம் கான் கூறும்போது, ‘இந்த புதிய தொழிலால் நான் மீன்வளம் தொடர்பான பிற நடவடிக்கைகளில் ஈடுபட உத்வேகம் பெற்றேன்.
2018 ஆம் ஆண்டில், பாராபங்கி மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் எனக்கு முதலிடம் கிடைத்தது. தற்போது என்னால் குறைந்தது 10 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்க முடிகிறது.’ எனத் தெரிவித்தார். பாராபங்கியின் நிந்தூரா பகுதியில் 2017 முதல் சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் பங்கசியஸ் மீன் விவசாயம் செய்யப்படுகிறது, இந்த விவசாயிகளும் அஸ்லமிற்கு மீன் பண்ணை செயல்பாடுகள் மற்றும் தீவன விநியோகத்தில் உதவுகிறார்கள்.
அஸ்லம் கான் உபியின் சுமார் 400 மீன் விவசாயிகளுடன் தொடர்பு வைத்துள்ளார். நல்ல மீன் விளைச்சலை உற்பத்தி செய்வதில் அவர்களுக்கு உதவுகிறார். தனது பண்ணையில் மறுசுழற்சி செய்யும் மீன்வளர்ப்பு அமைப்பை (RAS) அஸ்லம் கான் நிறுவியுள்ளார். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் மற்ற விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளை வழங்குவதற்கு தயாராகி வருகிறார்.
உபியின் கடும் குளிர்காலத்தில் பங்காசியஸ் வகை மீன் குஞ்சுகளை வளர்ப்பதில் அஸ்லமிற்கு மாநில அரசின் உதவி கிடைக்கிறது. தன்னை போல், மீன் விவசாயிகளுக்கு மேலும் பயனளிக்கும் வகையில், அஸ்லம் ஒரு விவசாயி உற்பத்தியாளர் அமைப்பை பதிவு செய்ய உள்ளார். மீன் விவசாயம் குறித்து உத்தர பிரதேச மீன்வளத்துறை இயக்குநர் என்.எஸ். ரஹ்மானி கூறுகையில், ’மீன் வளர்ப்பு மூலம், இளைஞர்களும் பெண்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முழு நன்மையை பெறுகின்றனர்.
மாநில அரசின் செயல்பாடுகளின் கீழ், உபியின் ஒவ்வொரு திட்டத்தின் நன்மைகளும் சமூகங்களையும் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகின்றன. இவற்றில் மீன் வளர்ப்பால் மக்கள் அதிக லாபம் அடைகிறார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்