நொய்டா: உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை போலியாக நடத்தி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் என்ற பெயரில் 6 பேர் கும்பல் போலி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளது. காவல் நிலையத்தின் போலி சின்னங்களுடன் அந்த அலுவலகத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், போலி அடையாள அட்டைகள், ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள், போலி ஆவணங்கள், சான்றிதழ்களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். www.intlpcrib.in என்ற பெயரில் அவர்கள் இணையதளத்தையும் தொடங்கி பல தரப்பில் இருந்து நன்கொடை வசூலித்துள்ளனர். அந்த அலுவலகம் சட்டப்படி இயங்குவது போல் பல தேசிய மற்றும் சர்வதேச சான்றிதழ்களும் போலியாக அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த நொய்டா போலீஸார், நொய்டா பேஸ்-3 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போலி காவல் நிலையத்தை மூடி, அங்கிருந்த போலி ஆவணங்கள், அடையாள அட்டைகள், பாஸ்புக்குகள், காசோலைகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இது குறித்து நொய்டா போலீஸ் துணை ஆணையர் சக்தி மோகஸ் அவஸ்தி கூறுகையில், ‘‘இந்த மோசடி தொடர்பாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த விபாஷ், ஆரக்யா, பபுல், பின்டுபல், சம்பம்தல் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.
உத்தர பிரதேசம் காசியாபாத் கவி நகரில், ஹர்ஸ்வர்தன் ஜெயின் என்பவர் அன்டார்டிகா பகுதியில் உள்ள வெஸ்டார்டிகா என்ற நாட்டின் தூதர் என கூறி போலி தூதரகத்தை நடத்தி பலரிடம் மோசடி செய்துள்ளார். அதுபோன்ற நாடே உலகத்தில் இல்லை. மேலும், செபோர்கா, லடோனியா போன்ற சிறு நாடுகளின் பிரதிநிதி போலவும் ஹர்ஸ்வர்தன் செயல்பட்டு பலரிடம் பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களில் போலி காவல் நிலையத்தை ஒரு கும்பல் நடத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.