புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தணிந்துள்ள நிலையில், இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரால் ஈர்க்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் `சிந்தூர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இது, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மே 10, 11 ஆகிய தேதிகளில் குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு `சிந்தூர்’ என குடும்பத்தினர் பெயரிட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தற்காக இந்திய ஆயுதப் படைகளைப் பாராட்டிய குஷிநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஷாஹி என்பவர் தனது மகளுக்கு ராணுவ நடவடிக்கையின் பெயரான ‘சிந்தூர்’ என வைத்துள்ளதாக கூறினார்.
மேலும், “பஹல்காம் தாக்குதலில் பலர் தங்கள் கணவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். சிந்தூர் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்ச்சி. எனவே எங்கள் மகளுக்கு சிந்தூர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம்” என்றார். அவரது கணவர் அஜித் ஷாஹியும் இதே கருத்தையே தெரிவித்தார். “எங்கள் மகள் பிறப்பதற்கு முன்பே அர்ச்சனாவும் நானும் அந்தப் பெயரைப் பற்றி யோசித்தோம். இந்த வார்த்தை எங்களுக்கு ஓர் உத்வேகம் அளிக்கிறது. இதை கவுரமாக கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.