புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் ஒரு குடிசைவீட்டில் குரங்குகள் புகுந்து இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று, நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன.
குரங்குகளின் சத்தம் கேட்டு குடிசைக்கு ஓடிச்சென்ற பெற் றோர் அங்கு குழந்தையைக் காணாததால் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இறுதியில் அக்குழந்தை தண்ணீர் நிரப்பப்பட்ட பீப்பாயில் மூழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை அரு கிலுள்ள சீதாபூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது அக்குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள் ளது. குறிப்பாக ஒரு வருடத்துக்கு முன்பு மணமான தம்பதியருக்கு பிறந்த முதல் குழந்தை இது.
நீண்ட காலமாக குரங்குகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த கிராமவாசிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். பிறகு சீதாபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனுவை அளித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் குரங்குகள் தொல்லை புதிதல்ல. மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் அவை பச்சிளங் குழந்தைகளை தூக்கிச் சென்று மாடியிலிருந்து வீசிய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இதில், சில குழந்தைகள் உயிரிழந்தன.
குரங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காததால் குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்வதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே குரங்குகள் தொல்லையைத் தடுக்க மாநில அரசு அவைகளை பிடித்து அருகிலுள்ள காடுகளில் விடுவது, கருத்தடை செய்வதும் தொடர்கிறது. மேலும், குரங்குகள் தொல்லையால் பாதிக்கப்படும் பொது மக்கள் அவற்றை சுட்டுத் தள்ளும் நடவடிக்கைகளும் தொடங்கி விட்டன.