லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது இன்று அதிகாலை லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர், 43 பேர் காயமடைந்தனர்.
புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஆர்னியா பைபாஸ் அருகே புலந்த்ஷஹர்-அலிகார் எல்லையில், லாரி ஒன்று டிராக்டர் மீது பின்னால் இருந்து மோதியதால், டிராக்டர் கவிழ்ந்தது.
காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரஃபத்பூர் கிராமத்திலிருந்து ராஜஸ்தானின் ஜஹர்பீருக்கு யாத்திரைக்காகச் சென்ற 61 பேர் இந்த டிராக்டரில் சென்றனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 9 பேர் உயிரிழந்தனர், 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 2 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர் என்று புலந்த்ஷஹர் மூத்த காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் சிங் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் அலிகார் மருத்துவக் கல்லூரிக்கும், 10 பேர் புலந்த்ஷர் மாவட்ட மருத்துவமனைக்கும், 23 பேர் குர்ஜாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த 9 பேரும் காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த 43 பேரில் 12 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.