புதுடெல்லி: உ.பி.யில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வரானார்.
இதையடுத்து கடந்த 2022-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜகவுக்கு கிடைத்தது. இதுபோல, யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல்வரானார்.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் மற்றும் 130 நாட்களை நிறைவு செய்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதலமைச்சரான அவர், 8 ஆண்டுகள் 127 நாட்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.