புதுடெல்லி: திருமண இணைய தளம் மூலமாக, 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரி உத்தரப் பிரதேசத்தில் கைதாகி உள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இவர், பல அரசு அடையாள அட்டைகளுடன் ஆறு வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.
தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்டிபிசி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர் தயாளி உப்பல். இவர் மணமகள் தேவை என திருமணம் இணையதளத்தில் சுயவிவரங்களை இட்டு ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார். இதற்காக, கடந்த ஆறு வருடங்களாக தயாளி உப்பல், பல மத்திய அரசின் பல்வேறு போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார். இதில், ராணுவம், தேசியப் புலனாய்வு நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்தியக் காவல் படையான சிஆர்பிஎப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தவகையில் அவர் உபி உள்ளிட்ட பல மாநிலங்களின் 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணமும் பறித்துள்ளார். தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று கூறி மூன்று பெண்களை ஏமாற்றி அவர்களைத் திருமணம் செய்துள்ளார். இந்த மூவரில் உபியின் சந்தவுலியைச் சேர்ந்த ஒரு பெண், தற்போது வாரணாசியில் வசிக்கிறார். இவர் அளித்த புகாரின் பேரில் தயாளி உப்பல் மீது பதிவான வழக்கை தனது நேரடிப் பார்வையில் விசாரணை செய்தார் தமிழரான வாராணாசியின் துணை காவல் ஆணையர் டி.சரவணன்.
இந்நிலையில், வாராணாசியின் சிதைபூர் காவல்நிலையப் பகுதியில், சந்தேகித்திற்கு இடமான வகையில் வாரணாசியில் ஒருவர் கைதானார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான், தயாளி உப்பல் என அடையாளம் தெரிந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாரணாசி டிசிபி சரவணன் கூறும்போது, ‘குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் மேஜர் அமித் மற்றும் மேஜர் ஜோசப் என்ற போலி பேட்ஜ்களும், அடையாள அட்டைகளும் இருந்தன.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று கூறி திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை பதிவு செய்ய தேவையான ஆவணங்களை அந்தப் பெண் கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தயாராக இல்லை.இதன் பின்னர், அந்தப் பெண் எங்களிடம் புகார் அளித்தார். இதன் விசாரணையில் ஆறு வருடங்களாகக் குற்றவாளி தயாளி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.’ எனத் தெரிவித்துள்ளார்.
போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அச்சிடும் ஆவணங்களையும், தயாளியிடமிருந்து போலீஸார் கைப்பற்றி உள்ளனர். தயாளி உப்பல் மீது சிதைபூர் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகளான 115 (2), 351 (2), 318 (4), 319 (2), 338, 336(3), 204, 205, 235 மற்றும் 6 மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவறின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது குறித்து குற்றவாளியான தயாளி உப்பல் கூறும்போது, ‘வங்கியில் பணியாற்றிய அப்பெண்ணை நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு, நானும் அவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம்.இதுவரை நான் அவரிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளேன். திருமண இணையதளத்தில் எனது சுயவிவரத்தை பதிவு செய்து, அவர் வீட்டில் இல்லாதபோது, நான் மற்ற பெண்களுடன் பேசுவேன்.
தெலங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து பெண்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.அவர்களிடமிருந்தும் சுமார் ரூ.40 லட்சம் பணம் வாங்கியுள்ளேன். இணையத்தில் ராணுவ அதிகாரிகளின் அடையாள அட்டைகளைத் தேடி, அச்சுப்பொறியின் உதவியுடன் போலி அடையாள அட்டைகளை நானே தயாரித்தேன்.
நான் ராணுவத்தில் இல்லை என்று யாரும் சந்தேகிக்காதபடி ஒரு கள்ளத் துப்பாக்கியையும் வாங்கி வைத்திருந்தேன். என் குற்றத்தை ஒப்புக்கொள்வதுடன் நான் செய்த இந்த தவறுகளுக்கு அனைவரிடமும் நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.