புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது.
அரசியலமைப்பை மதிப்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடு” என்று கூறியிருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்ளுபடி செய்தார். எனினும், அவர் வெளியிட்ட உத்தரவில், “சமூகத்தில் ஜாதியைப் பெருமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
உ.பி.யின் அரசு ஆவணங்கள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து ஜாதி பெயர்கள், சின்னங்களை அகற்ற வேண்டும். வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டுமென்றால், ஜாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அதன்படி, உ.பி. அரசு ஜாதி அடிப்படையிலான பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தடை செய்துள்ளது. இதுகுறித்து உ.பி. தலைமை செயலர் தீபக் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் ஜாதியை கொண்டாடுவது அல்லது வெறுப்பை பரப்பும் உள்ளடக்கத்துக்கு எதிராக ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்), கைது குறிப்புகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் போன்ற ஆவணங்களில் இனிமேல் ஜாதி இடம்பெறாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண தந்தையின் பெயருடன் தாயின் பெயரும் சேர்க்கப்படும்.
தேசிய குற்றப் பதிவு ஆவண தளத்தில் (என்சிஆர்பி) குற்ற கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்பில் (சிசிடிஎன்எஸ்) உள்ள ஜாதி தொடர்பான இடம் காலியாக விடப்படும். அனைத்து வகை வாகனங்களில் ஜாதியை குறிப்பிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களிலும் ஜாதி அடிப்படையிலான பதிவுகள், பிரச்சாரங்கள், விமர்சனங்கள் தடை செய்யப்படும். பட்டியலினத்தவருக்கான சட்டம் போன்ற வழக்குகளில் ஜாதியை குறிப்பிடுவது அவசியம் என்பதால், இந்த உத்தரவில் இருந்து அவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.