புதுடெல்லி: வட மாநிலங்களில் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அறியப்படுகிறது. அதன்படி உ.பி.யில் கன்வர் புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு நேற்று பிரயாக்ராஜில் உள்ள முஸ்லிம்கள் மலர் கொடுத்தும், மலர்களை தூவியும் வழியனுப்பி வைத்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு உதராணமாக உள்ள இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஸ்ரவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கங்கை நீரை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி யாத்திரை செல்கிறார்கள். இந்த யாத்திரையை பக்தர்கள் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு மேற்கொள்வார்கள். வரும் 24-ம் தேதி உடன் இந்த யாத்திரை நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஐலாபிஷேகம் நடத்த கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு முஸ்லிம்கள் ரோஜாப்பூ கொடுத்தும், மலர் தூவியும் வழியனுப்பி வைத்தனர். இது கவனம் பெற்றுள்ளது.
மேலும், ஸ்ரவண மாதத்தின் திங்கட்கிழமைகளில் (சோம்வார்) சிவன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று (ஜூலை 21) அதிகாலை முதலே உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், காசியாபாத்தில் உள்ள துதேஷ்வர் மகாதேவ் கோயில், பிரயாக்ராஜில் உள்ள மான்காமேஸ்வரர் கோயில், அயோத்தியில் உள்ள நாகேஸ்வரநாத் கோயில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயில், டெல்லியில் உள்ள கவுரி சங்கர் கோயில் மற்றும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சுக்ரேஸ்வர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.