புதுடெல்லி: உ.பி. தலைநகர் லக்னோவில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்டும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியை விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் நடத்தியது. அப்போது பல்ராம்பூரை சேர்ந்த ஜுங்கூர் பாபா என்பவர் தங்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக பலர் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, மதம் மாற்ற புகாரில் ஜுங்கூர் பாபா சிக்கி, கடந்த நவம்பர் 2024-ம் ஆண்டு தேடப்பட்டு வந்தவர். இதனால், உ.பி. அதிரடி படை (ஏடிஎஸ்) ஜுங்கூர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. கோமதி நகர் நிகழ்ச்சிக்கு மறுநாள் ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்கள் நீத்து நவீன் ரொஹரா (எ) நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜுங்கூர் பாபா கும்பல், பல மாநிலங்களில் இளம்பெண்களை மதம் மாற்றம் செய்து வந்துள்ளது. மதம் மாறுபவர்களுக்கு பணம், வேலை, தொழில் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. இந்த மதம் மாற்றத்துக்காக இந்துக்களில் உள்ள சமூகத்தினரை பொறுத்து பாபா கும்பலுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சங்கள் வரை கிடைத்துள்ளது.
மேலும் ஜுங்கூர் பாபாவுக்கு உ.பி.யில் ஒரு கல்லூரி மற்றும் பல நகரங்களில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் அமலாக்க துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஜுங்கூர் பாபா மதம்மாற்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய கும்பலை சேர்ந்த பலரும் அரபு நாடுகளுக்கு பலமுறை சென்று வந்துள்ளனர்.
அரபு நாடுகளில் இருந்து உ.பி.யின் ஆஸம்கர், முராதாபாத், அவுரய்யா, சித்தார்த் நகர் உள்ளிட்ட சில நகரங்களை சேர்ந்தவர்கள் மூலமாகவும், இந்த பாபா கும்பலுக்கு பணம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக 14 பேர் தேடப்பட்டு வருகின்றனர். ஜுங்கூர் பாபாவின் நெருங்கிய தோழி நஸ்ரீனுக்கு உ.பி. பல்ராம்பூரின் மாதேபூர் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கெனவே நோட்டீஸ் அளித்து கால அவகாசம் வழங்கிய நிலையில் உ.பி. அரசு நேற்று அந்த பங்களாவை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கியது.