புதுடெல்லி: உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் 20,324 மருத்துவ முகாம்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் 2 வரை இரண்டு வாரங்களுக்கு இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இவற்றில் உடல்நலப் பரிசோதனை மட்டுமின்றி, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பிற பரிசோதனைகள் மற்றும் தீவிர நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமின் ஒரு பகுதியாக 507 ரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இந்த முகாம்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளேன்.
பெண் குழந்தைகளை காப்போம் திட்டம், பெண்களுக்கு மகப்பேறு சலுகைள் வழங்கும் மாத்ரு வந்தனா திட்டம், பெண் சக்திவந்தன் சட்டம் போன்ற பிரதமர் மோடியின் முன்முயற்சிகள் இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை அளித்துள்ளன. எங்கள் ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் 41 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் அமேதியிலும் ஒரு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது. உ.பி.யில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.